புரட்சிகர சினிமாவில் வடிவ – உள்ளடக்க பிரச்சினைகள் - ழோர்க் சாஞ்சினெஸ்

புரட்சிகர சினிமாவில் அழகு அதன் இறுதி வடிவில் அல்லாமல் தயாரிப்பிலேயே இணைந்திருக்க வேண்டும். அழகு மற்றும் உள்ளடக்கத்தில் சரியான பொருத்தம் இருந்தாலே இது உண்டாகும். சினிமா சக்தி வாய்ந்த்தாக இருக்க மேற்சொன்ன உறவு சரியாக இருக்கவேண்டும். இல்லையென்றால், அது வெறும் துண்டுப் பிரசுரமாகவே தங்கிப் போகும், அதில் உள்ளடக்கம் மிகச்சரியாகவும், வடிவம் முறைப்படுத்தப்பட்டு, முரடாகவும் இருக்கும். வடிவத்தில் ஒன்றிணைப்பு இல்லையென்றால், அது சினிமாவின் சக்தியைக் குறைத்து விடும். அதே போல் உள்ளடக்கத்தின் தத்துவார்த்த இயங்கியலையும் அழித்து விடும். இறுதியில் நமக்கு கிடைப்பது அடிப்படையில்லாத, மனித தத்துவமோ, அன்போ இல்லாத மேம்போக்கான ஒரு கோட்டோவியமே! உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தப்படும் ஒரு படைப்பிலேயே இக்குணங்கள் தெரியவரும். மேலும் அது உண்மைக்குள் ஊடுருவதாகவும் இருக்க வேண்டும்.

Jorge Sanjinés Aramayo | Laprensacontacto's Blog

தொடர்புபடுத்தல்

நமது முடிவுகளைத் தவறவிடாமல் இருக்க முதலில் நமது வழிகளைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். போலி புரட்சிகரச் சினிமாவில் அழகு அழகிற்காகவே வணங்கப்படுவதைப் பார்க்கிறோம். அதற்கு புரட்சிகர கருத்துகள் ஒரு காரணமாக அமையும். அப்படங்களில் உள்ளடக்கமும் அழகும் சரியாகப் பொருந்தியிருப்பதாக தோன்றக்கூடும். ஆனால் இதன் முடிவை பார்வையாளர்களான மக்களிடமிருந்து பெறுவதே சரியான பரீட்சை. இப்படைப்புகளில் உண்மையில் ஏதும் குறிக்கோள் இல்லை என்பதை இந்த மக்களே முதலில் கண்டுபிடித்து விடுகிறார்கள். இறுதியில் இப்படங்கள் அவர்களை சுவாரஸ்யப்படுத்துவதில்லை அதைப்பற்றி ஏதும் சொல்வதுமில்லை.

ஒரு கலைஞனின் தத்துவார்த்த விருப்பங்களைப் பொறுத்தே அவனுடைய தேர்வுகள் அமையும். தன்னை புரட்சிகரக் கலைஞன் என்று அறிவித்துக் கொண்டிருப்பவன், யாரையும் குறிப்பிட்டுச் சாராமல் தன் படைப்பின் நியாயத்தில் நம்பிக்கை கொள்ளலாம். தன் தனிப்பட்ட வக்கிரங்களை வெளியிடுவதே முக்கியமென்று கருதலாம். அதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்ற அக்கறையின்றியும் படமெடுக்கலாம். இப்படியெல்லாம் செய்தால் அவர் பூர்ஷ்வாக் கலையின் முக்கிய கருத்துக்களை ஏற்பவராகவே இருக்கிறார் என்று பொருள். மேலும், அவர் ஒரு சந்தர்ப்பவாதியே.

புரட்சிகர உள்ளடக்கத்தை வெளியிட பொருத்தமான வடிவங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அது மற்றவகை உள்ளடக்கங்களை வெளியிடப் பயன்படும் வடிவங்களைப் போலவும் இருக்க வேண்டும். மேலும் அது அனைவரிடமும் சென்று சேரவும் வேண்டும். காலனியாதிக்கம் பற்றிய படத்தில் விளம்பரப் படத்தின் உணர்ச்சிகரமான மொழியைப் பயன்படுத்துவதும் ஒவ்வாத ஒன்று. அந்த மொழி உள்ளடக்கத்தில் கண்டிப்பாய் தடையேற்படுத்தவே செய்யும். ஏனெனில் இம்மொழி உள்ளடக்கத்திற்கு முற்றிலும் அன்னியமான ஒன்று அறுபது நொடி விளம்பர படத்தில் கேமரா விளம்பரம் பொருளை நெருக்கமாகவும், தூரமாகவும் ஒத்திசையும் இசையோடு காண்பித்து, கூடவே பின்னணியில் அப்பொருளின் பெயரை எட்டு, ஒன்பது முறை திருப்பித் திருப்பிச் சொல்லுமானால், அப்படத்தின் குறிக்கோள் நிறைவேறிவிடுகிறது. அப்படம் எதிர்ப்பே தெரிவிக்காத பார்வையாளர்களிடம் பலமுறை போட்டுக்காட்டவே தயாரிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு முறையும் அவ்விளம்பரம் செய்யும் போதெல்லாம் அவன் தொலைக்காட்சியை அணைத்துக் கொண்டிருக்கவும் வாய்ப்பில்லை. இங்கே உருவமும் உள்ளடக்கமும் அதற்கான பணியைச் சரியாகச் செய்துவிட்டது. ஆனால் இம்முறையை வேறு உள்ளடக்கங்களுக்குப் பயன்படுத்துவது அர்த்தமில்லாத ஒன்று. விளம்பரத்தின் உருவமும் முறைகளும் பார்வையாளர்களின், சகிப்புத்தன்மை, சக்தி வாய்ந்த பிம்பத்தைச் சந்திக்கையில் உருவாக்கும் எதிர்ப்பின்மையின் அளவு ஆகியவைகளைக் கணக்கிட்டே அமைக்கப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு சாத்தியமான ஒன்றை முப்பது நிமிடங்கள் தக்க வைப்பதென்பது சாத்தியமில்லாத விஷயம். ஏனெனில் அதற்குள் எதிர்விளைவைக் காட்ட நேரமிருக்கிறது. இந்த வழக்கமான முறைகளையும், உத்திகளையும் கொண்டு எடுக்கப்பட்ட படத்தால், காலனியாதிக்கத் தத்துவங்களை எதிர்க்க முடியாது. ஏனெனில் அது உள்ளடக்கத்தை மலினப்படுத்தவும், ஏமாற்றவும் செய்யும். இம்முறைகள் புரட்சிகர நெறிகளை மட்டும் மீறவில்லை. மாறாக அது தத்துவத்திலும், உள்ளடக்கத்திலும் காலனியாதிக்கத் தன்மையோடு ஒத்தவையாக இருக்கின்றன.

புரட்சிக்கரக் கலையில், எதிர்விளைவைத் தோற்றுவிப்பதன் மூலமே விஷயங்களைக் கொண்டு சேர்க்க முடியும். ஆனால் ஏகாதிபத்திய தொடர்பு சாதனங்கள் அனைத்தும் சிந்தனையை மென்மையாக்கவும், முயற்சிகளை அடி பணிய வைக்கவும் செய்கின்றன.

ஆனால் விஷயங்களைக் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சி எளிமைப்படுத்தப்படக்கூடாது. விஷயத்தின் ஆழத்தோடும், கனத்தோடும் பார்வையாளனிடம் கொண்டு சேர்க்க மிக உயர்ந்த உணர்வு வளம் வேண்டும். அதனோடு நுணுக்கமான கலைவளமும் சேர வேண்டும். மேலும் பார்வையாளர்களின் கலாசார வழக்கங்களோடும் அது இணைந்து போக வேண்டும். இவ்விணைப்பு மக்களின் மனப்போக்குகளையும் , அறிவையும், எதார்த்தத்தைப் பற்றிய பார்வையையும் கவர்வதாய் இருக்க வேண்டும். பின் கலையும், அழகும் இதை அடைவதற்கான வழிகளாய் மாறி விடுகின்றன. அந்தக் கலை மற்ற கலைகளைப் போல் சக்தி வாய்ந்ததாகவும், அதன் சமூகப் பார்வையினால் மரியாதைக்குரியதாகவும் ஆகிவிடுகிறது. 

கூட்டுமுயற்சி

புரட்சிகர சினிமா உருவாகத்துவங்கியிருக்கிறது. கலையைப் பற்றி கலைஞர்களுக்கிடையில் பூர்ஷ்வா சித்தாந்தம் உருவாக்கியிருக்கும் கருத்துக்களை அகற்றுவது அவ்வளவு எளிதான விஷயமில்லை. அது வேகமாகவும் செய்யப்பட முடியாது. மேற்கத்திய கலாச்சார பாதிப்பில் உருவான கலைஞர்களிடம் இது இன்னும் கஷ்டமான காரியம். ஆனால் இந்த வகை மாற்றம் சாத்தியமானதுதான். அதற்கு தொடர்ந்து மக்களைச் சந்தித்தல், சினிமா தயாரிப்பில் அவர்களுக்குள்ள ஈடுபாடு பொது மக்களின் கலைபற்றிய குறிக்கோள்களில் மேலும் தெளிவு மற்றும் தனிமனித வாதத்தை விலக்குதல் ஆகியவை மூலம் இது சாத்தியமாகும். இத்திசையில் பல்வேறு குழுக்கள் முயல்கின்றன. ஏற்கனவே கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட படங்களும் உள்ளன. அவைகளில் பொதுமக்களே நடிக்கவும், தயாரிப்பில் கருத்துக்கள் தெரிவித்தும், நேரடியாக ஈடுபடுகிறார்கள். இது போன்ற நேரங்களில் வேலை செய்வதற்கான வழிகளைத் தாங்களே வடிவமைத்துக்கொள்கிறார்கள். இதனால் மூடிய சினிமா பிரதிகள் காணாமல் போக மக்களின் வளமான கற்பனைகளிலிருந்து நடிக்கும்போது சுயமான வசனங்கள் பிறக்கின்றன. அங்கே வாழ்வே பேசுகிறது. அதன் வேகத்தோடும் உண்மையோடும், முதிர்ச்சியடைந்த புரட்சியைப் போன்றதே இதுவும். பொது மக்களுக்கான வெகுஜனத் திரைப்படம் தனிமனிதனின் கதையையே சொல்லும். ஆனால் புரட்சிகரப் படங்கள் கூட்டு அர்த்தத்தையே தருவதாயிருக்கும். தனிப்பட்டவர்களின் கதையை விட, மொத்த கதையினுள் இணைந்திருக்கும் தனிப்பட்டவரின் கதையை மக்கள் புரிந்து கொள்ள இப்படக்ககதைகள் உதவ வேண்டும்.. தனிப்பட்டவரின் கதையை மக்கள் புரிந்து கொள்ள இப்படக் கதைகள் உதவ வேண்டும். தனிப்பட்ட நாயகனாக உருவாக வழிவிடவேண்டும். இது படத்தின் உள்ளார்ந்த காரணமாகவும், தரத்திற்கு உந்துசக்தியாகவும் இருக்கும்.

மொழி

ஒரு இயக்குனர் மக்களைப்பற்றியப் படம் எடுப்பதற்கும், இயக்குநர் மூலம் மக்கள் படமெடுப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. மக்கள் ஒரு இயக்குனர் மூலம் படமெடுக்கும் போது, இயக்குனர் அம்மக்களின் வாகனமாகிறார். படைப்பின் இந்த உறவு மாறும்போது, உள்ளடக்கமும் மாறுகிறது. அதே போல் வடிவமும் மாறுகிறது.
புரட்சிகர சினிமாவில் இறுதிப்படைப்பு என்பது ஒத்த கருத்துடையவர்களின் தனிப்பட்ட திறமைகளின் விளைவே. அந்த இறுதி வடிவம் மாறாக மக்களின் தனிமனிதனின் சிறு பிரச்சினைகளை அல்ல. உணர்வையும், வேகத்தையும் படம்பிடித்து வெளிக்காட்டுவதாய் இருக்க வேண்டும். பூர்ஷ்வா சமூகத்தில் தனி மனிதப் பிரச்சினைகள் பெரிதுபடுத்தப்படுகின்றன. புரட்சிகர சமூகத்தில், அப்பிரச்சினை அனைவரும் பகிர்ந்துகொள்ளும் பிரச்சினையாக கருதப்பட்டு தீர்வு காணப்படும். இதனால் அப்பிரச்சனை சமாளிக்கக் கூடிய எல்லைக்குள் வந்துவிடுவதோடு, அனைவரின் பங்கேற்பினாலும் தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டு விடும். மேலும் இதனால் உண்டான உடல்நல, மனநல பாதிப்புகள் என்றென்றைக்குமாக விலகிவிடும். 

மக்கள் மற்றும் பொருட்கள் மேல் கலைஞன் கொள்ளும் விருப்பமோ, அக்கறையின்மையோ அவன் கட்டுப்பாட்டையும் மீறி படைப்புகளில் வெளிவந்துவிடும். அவனது கருத்துக்களும், உணர்வுகளும் அவன் அறியாமலேயே அவன் உபயோகிக்கும் ஆதார வளங்களில் கலந்துவிட்டிருக்கிறது. அவனுடைய குணங்கள், அவன் உபயோகிக்கும் மொழியின் வடிவங்களாகின்றன. அதனால் படைப்புகள் கருத்தைமட்டும் பேசுவதில்லை. கூடவே படைப்பாளியைப் பற்றியும் பேசுகின்றன.

Blood of the Condor Vintage Movie Poster - at SimonDwyer.Com

காதா இனக்குழுவினரின் விவசாயிகளை வைத்து நாங்கள் blood of tha condor படத்தைத் தயாரித்த போது, அது அரசியல் படமாக இருக்க வேண்டும் என கருதினோம். அதன்மூலம் பொலிவிய சமூக எதார்த்தத்தை, வெளிக்காட்டவே விரும்பினோம். ஆனால் எங்கள் திறமைகளைத் தெரிந்து கொள்வதே அப்படத்தின் அடிப்படைக் குறிக்கோளாயிருந்தது. அதே போன்று விவசாய நடிகர்களோடு எங்களுக்கிருந்த தொடர்பும் நேரடியானதே, ஆனாலும் எங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்பவே ஷாட்டுகளை உருவாக்கினோம். அது மக்களிடம் போய்ச் சேருமா? அல்லது கலாசார குணங்களில் ஆதிக்கம் இருக்குமா? என்றெல்லாம் யோசிக்கவில்லை. அப்படத்தில் ஸ்க்ரிப்ட் மனப்பாடம் செய்யப்பட்டு, அப்படியே ஒப்பிக்கப்பட்டன. சில காட்சிகளில் ஒலிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தோம். இது பார்வையாளர்களை மனதில் கொள்ளாமல் செய்யப்பட்டது. ஆனால் நாங்கள் அவர்களுக்குத்தான் படமெடுப்பதாகச் சொல்லிக்கொண்டோம். அவர்களுக்கு காட்சிகள் தேவையாயிருந்தன. பின்னர் அப்படத்தை அவர்களுக்குப் போட்டுக் காட்டிய போது இக்குறையை எங்களிடம் கூறினார்கள்.

எங்கள் படத்திற்கும், பார்வையாளர்களுக்கும் ஏற்பட்ட சந்திப்பு முக்கியமானது. பின்னர் அவர்கள் தங்கள் விமர்சனங்கள், கருத்துக்கள், அறிவுரைகள் மற்றும் குறைகளை எங்களிடம் கூறினார்கள். மேலும் எங்கள் படத்தின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் ஏற்பட்ட தத்துவார்த்த குழப்பங்களையும் கூறினார்கள். அதன் மூலம் எங்கள் திரைப்பட மொழியை நாங்கள் தெளிவாக்கிக் கொண்டோம். மக்களின் படைப்புத் திறனை அதில் இணைத்துக் கொண்டோம். அது சார்புகள் இல்லாமல், உண்மையான அறிவுநிலையை வெளிப்படுத்தியது.

Jorge Sanjinés – Movies, Bio and Lists on MUBI

Courage of the people படத்தை நாங்கள் அதன் உண்மையாக நடைபெற்ற இடங்களில் படமெடுத்துக்கொண்டிருந்தோம். அதில் சரித்திர சம்பவங்களை மீண்டும் ஒருமுறை உருவாக்கிக் கொண்டிருந்தோம். அங்கே உண்மையில் அந்தச் சம்பவங்கள் எப்படி இருந்திருக்கும் என்பதில் திடமாக இருந்தவர்களிடம் விவரித்து சம்பாதித்துக் கொண்டிருந்தோம். அவர்கள் அந்தச் சம்பவங்களை தீவிரமாகவும், ஈடுபாட்டோடும் விவரித்தார்கள். இது தொழில் நடிகர்களுக்கு தங்கள் அனுபவத்தை அதன் முழுத் தீவிரத்தோடு வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் மட்டுமில்லாமல், எடுக்கப்படும் படத்தின் அரசியல் குறிக்கோளையும் புரிந்து கொண்டிருந்தார்கள். அதனால் அப்படத்தில் அவர்களின் பங்கேற்பு போர்க்குணமுடையதாயிருந்தது. என்ன நடந்தது என்பது நாட்டுக்கு தெரிவிக்கும் பயன்பாட்டில், அவர்கள் அப்படத்தை கைக்கொண்டார்கள். அதை ஆயுதம் போல் பயன்படுத்த முனைந்தார்கள். நாங்கள் – திரைப்படக்குழு – அவர்களின் போராட்டத்திற்கான ஆயுதங்களானோம். தங்கள் எண்ணங்களை அவர்கள் எங்கள் மூலம் வெளிப்படுத்திக்கொண்டார்கள். சம்பவங்கள் பற்றிய மக்களின் ஞாபகங்களைக் கொண்டே படத்தின் கதை உருவாக்கப்பட்டது. இந்த முறை, பின்னர் நாங்கள் தயாரித்த The principal Enemy படத்திலும் பின்பற்றினோம். அதனால் மக்கள் தங்கள் கருத்துகளை வெளியிடத் தூண்டப்பட்டார்கள். அடக்குமுறையின் அமைதியை உடைத்துக்கொண்டு விவசாயிகள் படத்தில் பேச முற்பட்டார்கள். உண்மை வாழ்வில் அவர்கள் என்ன சொல்ல நினைத்தார்களோ அதை படத்தில் வரும் நீதிபதியிடமும், முதலாளிகளிடமும் பேசினார்கள். இங்கே சினிமாவும் எதார்த்தமும் ஒன்று சேர்கின்றன. அவை ஒன்றாகவே ஆகிவிடுகின்றன. இப்படத்தில் செயற்கைத்தனம் கொஞ்சம் தெரிந்தே முரண்பாடாயிருந்தது. ஆனால் மக்களின் வெளிப்பாடு மற்றும் படைப்பின் முலம் எதார்த்தம் சினிமாவோடு பின்னிப் பிணைக்கப்பட்டது.

Jatun auka (1974) - IMDb
 
சமீபத்திய படங்களில் நாங்கள் பயன்படுத்தும் நீண்ட ஒற்றை ஷாட்டுகளை படத்தின் உள்ளடக்கமே தீர்மானித்தது. பார்வையாளர்களிடம் ஆர்வமும் பங்கேற்பு உணர்வும் ஏற்பட இந்த முறையில் படமெடுக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக The Principal Enemy படத்தில் கொலைகாரன் நாற்சந்தியில் வைத்து விசாரிக்கப்படும்போது க்ளோஸ் அப் ஷாட்டுக்களைப் போட்டிருந்தால் பயனிருந்திருக்காது. ஏனெனில் குளோசப் ஷாட்டுகளை திடீரெனப் பயன்படுத்தும்போது அது சொல்லப்படும் நிகழ்ச்சியின் மொத்த வளர்ச்சியையும் தடை செய்துவிடும். விசாரணையின் கூட்டு பங்கேற்பும், பார்வையாளர்களின் பங்கேற்புமே அந்த நிகழ்ச்சியின் சக்தியாக இருக்கிறது. பார்வையாளர்களின் நோக்கு நிலைக்கும் நாடகீயமான தேவைகளுக்கும் இடையில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தவே கேமரா முயல்கிறது. அதன் மூலம் பார்வையாளனை படத்தில் பங்கேற்கச் செய்கிறது. சில சமயம் ஒரேஷாட்டில் க்ளோஸ் அப் இணைந்துவரும். அது உண்மையில் எதார்த்தத்தில் எவ்வளவு தூரம் நெருங்க முடியுமோ அவ்வளவு தூரமே இங்கேயும் நெருங்க முடியும். அப்படத்தில் சிலசமயம் பார்வையின் பரப்பு விஸ்தரிக்கப்பட்டு மக்களோடு தலைவரும் தெரிய, நாம் அவர்களை நெருங்கிப் பார்க்கவும், வழக்கறிஞர் பேசுவதைக் கேட்கவும் முடிகிறது. ஆனால் இந்த இடத்தில் ஒரு க்ளோஸ் அப் ஷாட்டை சேர்த்திருந்தால், அது இயக்குனரின் நோக்கு நிலையைத் தெரிவிப்பதாக இருந்திருக்கும். அதில் அவர் கொடுக்கும் அர்த்தமும் இணைந்திருக்கும். ஆனால் அர்த்தம் நிகழ்ச்சிகளிலிருந்தே வெளிப்பட வேண்டிய ஒன்று. 

Film Forum · THE PRINCIPAL ENEMY

The Principal enemy படத்தை நாங்கள் எடுத்துக்கொண்டிருந்த போது, தொழில் நுட்ப காரணங்களுக்காக எங்கள் முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. ஒரு நீண்ட ஷாட்டில் பின்னணி ஒலி பிரச்சினையைத் தந்தது. அதனால் அந்த ஷாட்டை நாங்கள் மேலும் பிரித்து எடுத்தோம். எல்லோருடைய பங்கேற்பையும் உருவாக்க வேண்டியிருந்ததால் ஷாட் தொடர்ச்சியைப் பின்பற்றுவது கஷ்டமாக இருந்தது, இப்படம் எங்கள் அளவில் புதிய சாத்தியக் கூறுகளைக் கண்டறிவதற்கான முயற்சி என்று நியாயப்படுத்த முடியும். இது நாங்கள் கற்றுக்கொண்ட படமெடுப்பு முறைகளிலிருந்து முற்றிலும் வேறாக இருந்தது. ஆச்சரியத்தையும் அளித்தது. ஒரு விஷயத்தை இரண்டு முறைகளில் கையாளலாம். ஒன்று அகவயமானது. இது தனி மனித தேவைகளுக்கும் குணங்களுக்கும் ஈடு கொடுப்பது. மற்றொன்று புறவயமானது. இது மனோதத்துவம் பங்கேற்புக்கு உதவியாய், அதே சமயம் பொதுஜன சினிமாவின் தேவையை உணர்ந்தும் எடுக்கப்படுவது. 

எங்களது படங்களில் புறவயமான கையாளுதல் இருந்தாலும், அது பாதிப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. மக்களின் ஒன்றிணைவையும், பங்கேற்பையும் கருத்தில் கொண்டு உபயோகப்படுத்தப்படும் நீண்ட ஷாட்டுகள், ஒரு இடைவெளியை உண்டாக்குகின்றன. இது அமைதியான, சார்பில்லாத எதிர்விளைவை உண்டாக்குகிறது. இந்த இடைவெளி பார்வையாளனுக்கு மட்டுமில்லாமல், திரைப்படக் கலைஞனுக்கும் யோசிக்கும் சுதந்திரத்தை அளிக்கிறது. இதனால் அவன் அங்கே க்ளோஸ் அப்புகளை உபயோகிக்க முடியாது. முதலில் இது பொருத்தமாக இருக்காது என்பதோடு, கலைஞனின் செயல்பாட்டைத் தடுப்பதாகவும் இருக்கும். இவ்விடைவெளி, புதியவைகளை கண்டுபிடிக்கும் சுதந்திரத்தையும் அளிக்கிறது. பார்வையாளனைப் பொருத்தவரை, அவனுக்கு படத்திலிருந்து ஏதும் அழுத்தமில்லை. அதேபோல் அதிக க்ளோஸ் அப்புகளோ, வேகமோ அழுத்தம் தருவதில்லை. அவனுடைய அழுத்தம் எல்லாம் கதையிலிருந்து வருகிறது. உள்ளடக்கமே அவனைப் பாதிக்கிறது. அதன் தனித்துவமான தரம், சமூக வேகம் மற்றும் மனிதனுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமே அவனைப் பாதிக்கிறது.
 
புரட்சிகரக்கலை என்பது மக்களின் வாழ்க்கையாக காட்டுவதற்கும், பொதுஜன கலாசாரத்திற்கு இடையில் உள்ள வேறுபாட்டைக் காட்டும். வெகுஜன கலாச்சாரம் என்பது அனைத்து மக்களையும் ஒன்றிணைத்தது.; அவர்களின் சிந்தனையோடு, உண்மை பற்றிய உணர்வோடு மற்றும் அன்பான வாழ்வோடு இந்த கலையின் தேவை என்னவென்றால், இது அழகின் மூலம் உண்மையைச் சாத்தியப்படுத்துகிறது. ஆனால் பூர்ஷ்வா கலையோ பொய்களின் மூலம் கூட அழகைக் கட்டமைக்க விரும்புகிறது. வெகுஜன கலாசாரத்தை உணர்ந்து பயன்படுத்திக் கொண்டோமானால், சுதந்திரமான கலையின் மொழியை நாம் உருவாக்க முடியும்.

தமிழில் : துளசி
சலனம் ஜீன் – ஜீலை1993